'சிவ அருளை அள்ளிக் குவிக்கும் மகாசிவராத்திரி!'... 'சிவபெருமானை வழிபடும் முறை என்ன?'... மகாசிவராத்திரி ஸ்பெஷல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாசிவராத்திரியான இன்று, அதன் மகிமை, விரத முறைகள் மற்றும் வழிபாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை என்றாலும், அவை இறை வடிவங்களே என்பது மக்கள் நம்பிக்கை. ஒவ்வொரு வேதத்துக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. நான்கு வேதங்களில் நடுநாயகமாகத் திகழும் வேத பாகம், யஜுர்வேத ஶ்ரீ ருத்ரம். அந்த ஶ்ரீ ருத்ரத்திலும் மத்தியில் இருக்கும் சொல், 'சிவ' என்பது. இந்த சிவ என்னும் வார்த்தையைச் சொல்ல, சகல வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். எளிதில் அனைவராலும் சொல்ல முடிகிற மந்திரம், சிவ மந்திரம். அந்த சிவ மந்திரத்தைத் தவறாமல் உச்சரிக்கவேண்டிய தினம், சிவராத்திரி.
இந்த உலகில் நன்மை தீமைகளைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒரே பலன்தான். தெரியாமல் செய்ததனால் நமக்கு வரவேண்டிய நன்மை தீமைகள் வராமல் போகாது. அதுதான் சிவராத்திரி மகிமை நமக்குச் சொல்லும் பாடம்.
மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும். மாசிமாதம் பனிக்காலத்தின் முடிவிலும் வெயில்காலத்தின் வாசலிலும் நிற்கும் காலம். இரவில்தான் இந்தப் பிரபஞ்சமே லிங்க வடிவம் கொண்ட தோற்றத்தை உணரமுடியும். அந்தப் பிரபஞ்சப் பெருவெளிக்குள் நாமும் இருக்கிறோம் என்கிற நினைப்பே சிவனோடு கலந்திருக்கிறோம் என்கிற பேருணர்வை நமக்கு உண்டாக்கும். மேலும், மற்ற நாள்களின் இரவில் உணவு, உறக்கம், இன்பம் என்று களிக்கும் மனித மனம், இந்த நாளில் சிவ சிந்தனையிலேயே செலவிடும். சிவபெருமானுக்கு நிகழும் அபிஷேகங்களைக் காணும்போது மனம் மகிழ்ச்சியில் துள்ளும். இந்த மகிழ்ச்சி, அடுத்த ஓராண்டு முழுவதும் மனமெல்லாம் நிறைந்திருக்கும். நாலு கால பூஜைகளிலும் கலந்துகொண்டு இறைவனை வணங்க வேண்டும். அப்போது, வேண்டும் வரம் கட்டாயம் கிடைக்கும் என்பது அடியவர்களின் வாக்கு.
சிவ தரிசனம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வில்வ இலைகளையாவது சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கண்விழித்து சிவ நாம ஜபம் செய்ய வேண்டும். தவறாமல் நான்கு காலமும் சிவபுராணம் படிக்க வேண்டும். இவை நான்கையும் செய்ய, வேண்டிய வரங்கள் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நான்கு கால பூஜைகளுக்குரிய அபிஷேக திரவியங்களைக் கொஞ்சமேனும் வழங்கினால் வறுமை அகலும். வஸ்திரம் வழங்கினால், கேட்கும் வரம் கிடைக்கும்.
