'கற்களால் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்'... பதறியடித்து ஓடிய பயணிகள்... 'சென்னை மின்சார ரயிலில் நடந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 07, 2019 01:35 PM
சென்னை வந்த மின்சார ரயிலில் வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரலுக்கு, கடந்த செய்வாய்கிழமையன்று மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. அதில் பயணித்த கல்லூரி மாணவர்கள், கற்களைக் கொண்டு தாளத்துடன் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ரயிலானது பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலையத்தை அடைந்தபோது, மோதல் முற்றி ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டதாகத் தெரிகிறது. இதில் ரயிலில் வந்த பயணி ஒருவர் காயமடைந்தார்.
மேலும் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதையடுத்து தகவலறிந்து, ரயில்வே போலீசார் செல்வதற்குள் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடினர். எனினும் அங்கு விசாரித்த போது, ஒரே ஒரு கல்லூரி மாணவர் மட்டும் சிக்கியுள்ளார். விசாரணையில் அந்த மாணவர் எந்த மோதலிலும் ஈடுபடவில்லை என தெரிய வந்ததையடுத்து, பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். ரயில் பயணிகள் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.