‘காதலி பேச்சைக் கேட்டு இளைஞர் செய்த காரியம்..’ விபரீதத்தில் முடிந்ததால் ஏற்பட்ட பரிதாபம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Aug 02, 2019 11:07 AM
கியூநெட் என்ற நிறுவனத்தின் பெயரால் சென்னையில் மீண்டும் ஒரு அப்பாவி இளைஞர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரும் அவருடைய உறவுக்காரப்பெண்ணான விஷ்ணுபிரியாவும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த ரஞ்சித்குமாரிடம் ஏதாவது தொழில் செய்தால் தான் என்னை உனக்குத் திருமணம் செய்து தருவார்கள் எனக் கூறிய விஷ்ணுபிரியா அவரே அதற்கு ஒரு ஐடியாவையும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாமா சேதுராமன் என்பவர் க்யூநெட் என்ற நிறுவனம் மூலம் எம்எல்எம் பிசினஸ் செய்வதாகவும், அதில் நாமும் இணையலாம் என அவர் கூறியுள்ளார்.
இதை நம்பி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரான ரஞ்சித்குமாரும் வங்கியிலும் நண்பர்களிடமும் கடன் வாங்கி சேதுராமனிடம் முதலீடாக 8 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் பணம் கொடுத்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதிலிருந்து லாபமோ, கொடுத்த பணமோ திருப்பிக் கிடைக்காததால் ரஞ்சித்குமார் சந்தேகமடைந்துள்ளார். சேதுராமனிடம் இதுகுறித்து கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கியூநெட் நிறுவனத்திலிருந்து விலகி விட்டதாகவும், பணத்தைத் திருப்பித் தரமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் அவருடைய நண்பர்கள் யாரையாவது அதில் சேர்த்துவிட்டால் ரஞ்சித்குமாருடைய பணத்தை திருப்பித் தருவதாக சேதுராமன் கூறியுள்ளார். இதை நம்பிய ரஞ்சித்குமார் நண்பர் ஒருவரையும் அதில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வைத்துள்ளார். சில மாதங்களுக்குப் பிறகு அந்த நண்பருக்கும் பணம் எதுவும் கிடைக்காமல் போக அவர் ரஞ்சித்குமாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் கடன் வாங்கி நண்பரின் பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
தொழில் முயற்சி இப்படி தோல்வியில் முடிய விஷ்ணுபிரியாவைத் திருமணமாவது செய்து கொள்ளலாம் என ரஞ்சித்குமார் அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தொழிலில் தோற்ற உன்னைத் திருமணம் செய்ய முடியாது, நன்கு படித்த வேலை பார்க்கும் இளைஞரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறிவிட்டு அவரை விட்டு விலகியுள்ளார். இதனால் மனமுடைந்த ரஞ்சித்குமார் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கச் சென்றபோது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டும் சென்னையில் கியூநெட் என்ற நிறுவனத்தில் பெயரில் இதேபோல சிலர் ஏமாற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போதும் அந்த நிறுவனத்தின் பெயரில் சில முகவர்கள் பணமோசடியில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.