'கொரோனா' பரப்பும் 'காய்கறி சந்தைகள்...' 'கோயம்பேட்டைத்' தொடர்ந்து 'பீதியை கிளப்பிய ஏரியா?...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | May 04, 2020 07:57 AM

திருவான்மியூர் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தையை மூடியதுடன், அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி வியாபாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Corona infection confirmed to dealer in Travanmiyur market

தமிழகத்தில், சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. நான்கு நாட்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், கோயம்பேடு மார்க்கெட் ஊழியர்கள் என பலருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு வருகிறது.

முக்கியமாக கோயம்பேடு மார்க்கெட் பகுதி கொரோனா வைரசை பரப்பும் மையமாகவே மாறியுள்ளது. அங்கு விழிப்புணர்வின்றி ஏராளமானோர் காய்கறி வாங்க குவிந்ததால் பலருக்கு கொரோனா பரவியிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரும் நிலையில், அவர்கள் மூலமாக பலருக்கு தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு தொழிலாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது கோயம்பேடு சந்தையை தொடர்ந்து திருவான்மியூர் காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று அந்த சந்தை மூடப்பட்டு அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் அப்பகுதியில் அமைக்கப்பட்ட சந்தை தற்போது அங்கிருந்து வாகனம் நிறுத்தம், வடக்கு மாட வீதி மற்றும் கிழக்கு மாட வீதி என மூன்று பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களை கண்டறிந்து அங்கே சந்தை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய இதுபோன்று விரிவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், மே 6 புதன்கிழமை முதல் அவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.