‘சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு’!.. அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமின்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 11, 2019 06:00 PM

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

Chennai techie Subhasri death case Jayagopal gets bail

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்தார். அப்போது பின்னே வந்த தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இருவரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதால் அம்மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் தரப்பில் இருந்து ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது 45 நாட்களுக்கும் மேலாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும், எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்ற மனுதாரர்கள் தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதாக இரு நீதிபதிகள் அமர்வில் தெரிவிக்கப்பட்டதே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். குற்றப்பத்திரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயகோபால் மற்றும் மேகநாதன் ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும் வரை மதுரையில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும், மேகநாதன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #SUBHASRI #JAYAGOPAL #BAIL