‘தமிழக மக்களுக்கு துளிர்விடும் நம்பிக்கை’... ‘கொரோனாவில் இருந்து குணமடைந்து’... ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 74 வயது சென்னை பாட்டி’... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 08, 2020 10:59 PM

தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்துள்ள சென்னையை சேர்ந்த 74 வயது மூதாட்டி ஒருவர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களுக்கு சற்று நம்பிக்கை அளித்துள்ளது.

Chennai Covid old woman patient discharged from Rajiv Gandhi Hospital

கடந்த ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை தினமும் 50 பேருக்கு குறையாமல் உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக சற்று ஆறுதல்படக் கூடிய வகையில் இன்று கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 48 -ஆக உள்ளது. அதாவது சுமார் 8 நாட்களுக்குப் பிறகு, தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில், தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், கடந்த மாதம் 26-ம் தேதி சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள பொழிச்சலூரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவக்குழுவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த மூதாட்டிக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயும் இருந்த நிலையில், கொரோனா பாதித்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவக் குழுவின் முயற்சியால் கொரோனாவில் இருந்து குணமடைந்து, இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய மூதாட்டிக்கு மருத்துவர்கள் மலர்க்கொத்து மற்றும் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.