"மோடி உண்மையில் பெரிய மனிதர் தான்..." நேற்று 'மிரட்டல்' விடுத்த 'ட்ரம்ப்'... இன்று 'திடீர் பாராட்டு'... 'எதற்காகத் தெரியுமா?'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 08, 2020 07:01 PM

இந்தியாவிடமிருந்து 2.9 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை தாங்கள் வாங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Modi is a great man-US President Trump Appreciates

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தயாரிப்பில் உலக அளவில் இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. உலக அளவில் 70 சதவீதம் சப்ளை இந்தியாவிலிருந்துதான் செல்கிறது என்று இந்தய மருந்து தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அண்மையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், இந்தியாவிடம் உரிய மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்களை ஆர்டர் செய்திருப்பதாகவும், குறித்த நேரத்தில் மருந்து பொருட்களை டெலிவரி செய்யவில்லை என்றால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

ஆனால், பரவி வரும் கொரோனா வைரசுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்ததால், அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி தடை விதித்தது.

மத்திய அரசின் இந்தத் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இதனால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி ட்ரம்ப் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கவில்லை.

இதனால் ட்ரம்ப், “ இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கான ஏற்றுமதித் தடையை விலக்காதது வியப்பளிக்கிறது. எதிர்காலத்தில் பதிலடி கொடுப்போம். ஏன் பதிலடி கொடுக்கக் கூடாது” என மிரட்டும் விடுக்கும் விதமாக பேசினார்.

ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில், மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “லட்சக்கணக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை நாங்கள் இந்தியாவிடம் இருந்து வாங்கியிருக்கிறோம். 2.90 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அமெரிக்காவுக்கு வருகின்றன. நீங்கள் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்தால் பெரிய மனிதர் என்றேன். உண்மையில் மோடி பெரிய மனிதர்தான்.” எனத் தெரிவித்தார்.