'பயப்படாதீங்க'...'நம்ம டாக்டர்கள் தீயா இருக்காங்க'... 'சீக்கிரம் நல்ல செய்தி வரும்'... விஜயபாஸ்கர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 18, 2020 04:37 PM

கொரோனா வைரசை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி குறித்து சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

Chennai : Coronavirus vaccine Update, Health Minister Vijayabaskar

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா வைரசுக்கு ராஜஸ்தான் மாநிலத்திலும், அமெரிக்காவிலும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது உண்மையா என்பதை அமைச்சர் விளக்க வெண்டும் என கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்து பேசினார்.

அதில், ''பல்வேறு நாடுகளை சேர்ந்த 850 மருத்துவ நிபுணர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்ட மருத்துவ மாநாடு, சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவிலும் புதிய மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வு நடைபெறுவதாக அங்குள்ள நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபோல பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரசை தடுப்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதோடு கொரோனாவை தடுப்பது குறித்து தமிழக மருத்துவர்களும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த நோய் தாக்கிய ஒருவர் குணமடைந்தது எப்படி என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் ஆகியவற்றை குணப்படுத்துவதற்கான தனித்தனி மருந்துகள் கொடுத்தோம். புதிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் தமிழக மருத்துவர்கள் செய்து வரும் ஆய்வில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நல்ல செய்தி விரைவில் வர காத்திருக்கிறோம் என'' அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு சார்பில் 5 இடங்களில் கொரோனா கண்டுபிடிப்பதற்கான ஆய்வகங்கள் உள்ளன. இதன் மூலம் தினமும் 500 பேருக்கு ஆய்வு செய்ய முடியும். தனியார் மருத்துவமனைகளிலும் இந்த ஆய்வகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் நேற்றே கோரிக்கை வைத்தார். மத்திய அரசுதான் இதற்கு அனுமதி வழங்க வேண்டும். அப்பல்லோ, சி.எம்.சி. மற்றும் தகுந்த உபகரணங்கள் கொண்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். என அவர் கூறினார்.

Tags : #MKSTALIN #CORONAVIRUS #VIJAYABASKAR #VACCINE