‘பேஸ்புக்’ல போட்டோ எடுத்து.. ‘விளையாட்டுக்கு பண்ணோம்’.. 3 இளைஞர்கள் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன வேலூர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 18, 2020 11:04 AM

இரண்டு இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தவறான தகவல் பரப்பிய கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Vellore youths arrested for spreading Coronavirus rumors

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திவாகர் (18). சுண்ணாம்புபேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை தகவல் பரவியது. அவர்களது புகைப்படங்களை செய்திகளில் வருவதுபோல ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனால் அதிர்ச்சியடைந்த சம்மந்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களுக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளனர். இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த வீடியோ குடியாத்தம் அரசு மருத்துவமனையின் பேரும் குறிப்பிடப்பட்டிருந்ததால், மருத்துவமனை தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் அந்த வீடியோக்களை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்களின் நம்பர்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் விஜயன் (19). செதுக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்திருக்கும் சுகுமார் (19). அவரது நண்பர் சிவகுமார் (22) ஆகிய மூவரும் இந்த தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘பேஸ்புக்கில் இருந்து அந்த இளைஞர்களின் புகைப்படங்களை எடுத்து, செல்போனில் புதிதாக வந்த செயலியை பயன்படுத்து விளையாட்டுத்தனமாக பரப்பினோம்’ என அவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : #COLLEGESTUDENT #VELLORE #CORONAVIRUS #RUMORS #ARRESTED #COVID2019