'கொரோனா தடுப்பு மாஸ்க் இலவசம்...' 'கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விழிப்புணர்வு...' ஆட்டோ ஓட்டுனரின் மனிதம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா, தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக முக கவசம் அளித்து வருகிறார்.

கடந்த நான்கு மாதங்களாக அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது சீனாவிலிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி வரும் கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனா வைரஸ் இதுவரை 162 பேருக்கு பரவியுள்ளதாகவும், இவ்வைரசால் 3 பேர் உயிரிழந்ததாகவும் அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ராகவேந்திரா என்பவர் கோவையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கொரோனா வைரஸிற்காக அவர் செய்த விழிப்புணர்வு செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ராகவேந்திரா தனது ஆட்டோவின் பின்புறம், தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு முகக்கவசம் இலவசம் என ஒட்டியுள்ளார். அதை செயல் படுத்தும் விதமாக தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் இலவசமாக முகக்கவசத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் இது குறித்து விழிப்புணர்வையும் ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா ஏற்படுத்தி வருகின்றார்.
தற்போது முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா செய்யும் இந்த மகத்தான செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இம்மாதிரியான மனிதர்கள் செய்யும் செயல்கள், மனிதர்களுக்குள் இருக்கும் மனிதத்தை உணர செய்கிறது.
