"இதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியாது..." "உடனே கடைய திறங்க...!" 'கதறுவது குடிமகன்கள் அல்ல...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 24, 2020 10:35 AM

மாநில கஜானாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக மதுக்கடைகளை திறக்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென இந்திய மது உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Federation of Indian Breweries Request to Open Brewery

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடபட்டுள்ளன. இதனால் மாநில அரசுகள் சுமார் 20,000 கோடி வருவாயை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

வருவாய் இழப்பு தீவிரமடைந்துள்ளதால், கொரோனா ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் மட்டுமாவது மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டுமென இந்திய மது உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் இந்திய மது உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் “அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மது என்பது மாநிலங்களின் விவகாரம். ஆகையால், மது விற்பனைக்கு அனுமதியளிப்பதும், தடை விதிப்பதும் மாநில அரசுகளின் அதிகாரத்தில் இருக்க வேண்டும்.

ஆகையால், கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஏற்ப கொரோனா ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் மட்டுமாவது மது உற்பத்தி, விநியோகம், விற்பனைக்கு அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளது.  இந்த நெருக்கடியான சூழலில் தொழில்துறைகளும், பொருளாதார செயல்பாடுகளும் முடங்கியுள்ளதால் மாநில கஜானாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

மது உற்பத்தி தொழில்துறை செயல்படாமல் முடங்கினால், நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், முற்றிலுமாக வருவாய் இல்லாத நெருக்கடியான சூழலில் நீண்டகாலத்திற்கு எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் மது உற்பத்தில் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.