'சென்னையின் பிரபல கடையில் தீபாவளி ஷாப்பிங்'... 'நைசாக புகுந்த பெண்'... சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ந்த ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் பிரபல கடையில் கூட்டத்தைப் பயன்படுத்தி விலையுயர்ந்த புடவைகளைத் திருட முயன்ற நிர்மலா என்னும் புடவை திருடும் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் மக்கள் பலரும் தீபாவளி ஷாப்பிங் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பிரதான கடை வீதிகள், தெருக்கள் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றன. விழாக்கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இதனைத் தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தி.நகர் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ட்ரோன் மூலமும் கண்காணிப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். பொருட்கள் திருட்டுப்போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்குக் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் வீராஸ் துணிக்கடை செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த கடையில் ஏராளமான பொதுமக்கள் புதிய ஆடைகளை வாங்கி செல்கின்றனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண் ஒருவர் தான் அணிந்திருந்த சேலையில் மறைத்து, புதிய விலையுயர்ந்த சேலைகளைத் திருடியுள்ளார்.
கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா மூலம் கடையின் நிகழ்வுகளைக் கடை ஊழியர்கள் கண்காணித்து வந்த நிலையில், புடவை திருடிய அந்த பெண்ணை பிடித்து, அவரிடம் இருந்து திருடிய சேலைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட பெண்ணை வண்ணாரப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் ஆந்திராவைச் சேர்ந்த நிர்மலா என்பதும், ஏற்கனவே தி.நகர் சரவணா ஸ்டோர் போன்ற கடைகளில் இது போன்று திருடியதற்காகக் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.