'இங்க ஒரு தொகுதியில் கூட பாஜக ஜெயிக்காது'... 'தமிழ்நாட்டில் நீங்க இத தான் செஞ்சிருக்கணும்'... பரபரப்பை கிளப்பியுள்ள சுப்பிரமணியன் சுவாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் சென்னையில் மட்டும் சேப்பாக்கம், மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி, துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளும், ராசிபுரம், கோவை (தெற்கு), நெல்லை, பரமக்குடி, திருவாரூர், கிணத்துக்கடவு, காஞ்சிபுரம், காரைக்குடி, ராஜபாளையம் உள்ளிட்ட பல தொகுதிகளைக் கேட்டதாகத் தகவல் வெளியானது.
இதில் பல தொகுதிகள் தற்போது அதிமுக வென்று வலுவாக உள்ள தொகுதிகள் ஆகும். இதில் சேப்பாக்கத்தில் குஷ்புவும், மயிலாப்பூரில் கரு.நாகராஜன் அல்லது கே.டி.ராகவன், ஆயிரம் விளக்கில் கு.க.செல்வம், துறைமுகத்தில் வினோஜ் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் தற்போது பாஜகவுக்குச் சென்னையில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவுக்குத் துறைமுகம் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகள் மட்டுமே வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குஷ்பு போட்டியிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், பாஜகவினர் இறங்கி வேலை பார்த்த சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ''தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெறும் அல்லது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும் எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
