'உங்களுக்கு யாருங்க அங்கீகாரம் கொடுத்தா'?... 'வார்த்தைகளை பார்த்து பேசுறது நல்லது'... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதையடுத்து எல்.கே.சுதீஷ் அதிமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசிய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்து டெபாசிட்டை இழப்பார்கள் என்றும் அதிமுகவின் கே.பி.முனுசாமி, அதிமுகவுக்குச் செயல்படவில்லை, பாமாவிற்கு ஸ்லீப்பர்செல்லாக இருந்து கொண்டு கொள்கை பரப்பு செயலாளராக அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என எல்.கே.சுதீஷ் ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக எடுத்த முடிவு துரதிஷ்டவசமானது. பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது தேமுதிக சேற்றை வாரி இறைக்கக் கூடாது. நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது, பிடிக்கவில்லை என்றால் நண்பர்களைப் போலக் கைகுலுக்கிப் பிரிந்துவிட வேண்டும். எல்.கே.சுதீஷின் கருத்து தமிழக மக்கள் சிரிக்கக் கூடிய வகையில் தான் இருக்கும்.
வார்த்தைகள் அளந்து பேசாமல் இருந்தால், அதற்குரிய பதிலடி கிடைக்கும். எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் எனக் கூறியுள்ளார். பலம், பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தொகுதிகள் ஒதுக்கப்படும். அதன்படி தான் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர்களுக்குத்தான் பாதிப்பு. தேமுதிகவுக்கு அரசியலில் அங்கீகாரம் கொடுத்தது அதிமுகதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
