'வேகமெடுக்கும் வேட்பாளர் தேர்வு'... 'தயாராகும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்'... அதிமுக தலைமையகத்தில் தீவிர ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக வேட்பாளர் அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியானது. இதனிடையே சில அமைச்சர்கள் தொகுதி மாற உள்ளதாகவும், அமைச்சர் பதவியை இழந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தனது இரட்டை இலை சின்னத்தில் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 64 இடங்களையே மற்ற கட்சிகளுக்குப் பிரித்தளிக்கும். இதுதவிர மற்றவர்களை தங்கள் சின்னத்தில் போட்டியிட வைக்க அதிமுக எண்ணுகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் தற்போதுள்ள அமைச்சர்களில் சிலர் தொகுதி மாறி போட்டியிட விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் தொகுதியிலிருந்து சாத்தூர் அல்லது அருகில் உள்ள வேறு தொகுதிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியிலிருந்து விளாத்திகுளத்துக்கும் மாற உள்ளதாகப் பேசப்படுகிறது. இதுதவிர, பெண் அமைச்சர்கள் சரோஜா, நிலோபர் கபீல், ராஜலட்சுமி ஆகியோரது தொகுதியிலும் மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் உட்பட, பதவியிழந்த சில முன்னாள் அமைச்சர்களுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக அதிமுக தலைமையகத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், வளர்மதி, தமிழ் மகன் உசேன், வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
