'நீண்டு கொண்டே சென்ற பேச்சுவார்த்தை'... 'நள்ளிரவில் நடந்த கையெழுத்து'... 'பாஜகவுக்கு 20 தொகுதிகள்'... நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தனர். இந்த சூழ்நிலையில் அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் சென்னை வந்த போது நட்சத்திர விடுதியில் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பாஜகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்திய நிலையில், பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றது. மறுபக்கம் வேட்பாளர் நேர்காணல் என அதிமுக வேகம் எடுத்ததால் பாஜக தொண்டர்கள் சற்று குழம்பிப் போனார்கள்.
இந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து சத்தமில்லாமல் தொகுதி உடன்படிக்கையும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அந்த உடன்படிக்கையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் - இபிஎஸ் கையெழுத்திட்டுள்ளனர். பாஜக சார்பில் பிரசாரத்திலிருந்ததால் எல்.முருகன், சி.டி ரவி பேக்ஸ் மூலம் கையெழுத்திட்டுள்ளனர்.
பாஜக 30 தொகுதிகள் வரை கேட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அதிமுக 20 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுகவின் கை ஓங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மற்ற செய்திகள்
