'சசிகலா என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா'?... முதல் முறையாக மனம் திறந்த சீமான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சசிகலாவைச் சந்தித்த போது அவர் தன்னிடம் என்ன கூறினர் என்பது குறித்து சீமான் தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சசிகலா சிறையிலிருந்து வந்ததும் தான் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சசிகலா தற்போது அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவைச் சந்தித்தபோது அவர்களுக்குள் நடந்த உரையாடல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், ''சசிகலா சிறையிலிருந்து திரும்பியதும் நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் என்னையும் என் மனைவியையும் பார்க்க விரும்பினார். அவரின் அழைப்பிலேயே நான் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் தனிப்பட்ட விசாரணைகளைத் தாண்டி நாங்கள் அரசியலும் பேசினோம்.
வரும் தேர்தலில் அதிமுகவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதிமுகவுடன் நான் சமாதானம் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அது நடைபெறவில்லை. அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அதேவேளையில் அவர் நானும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அழுத்தவில்லை. ஏனெனில், நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று அவருக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார்.
மேலும் ''சசிகலா என்னை குடும்பத்துடன் வரச் சொன்னார். ஆனால் எனது மகன் தூங்கிக் கொண்டு இருந்தான். தூக்கத்தில் அவனை எழுப்பினால் அழுவான் என்பதால் நான் மட்டும் சென்று சசிகலாவைப் பார்த்தேன். அங்குத் தனியாக நிறையப் பேசினோம். அனைத்தையும் பொது வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை'' எனச் சீமான் தெரிவித்துள்ளார்.