தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்..? ஏபிபி நியூஸ், சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்குக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன நிலையில், கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் (ABP News, C-Voter) நிறுவனங்கள் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 154 முதல் 162 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணி, தேர்தலில் 41.4% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39.4% வாக்குகளைப் பெற்றது. தற்போதைய கருத்துக்கணிப்பின் படி 2% கூடுதல் வாக்குகளைப் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 28.6% வாக்குகள் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 58 முதல் 66 தொகுகள் வரை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 43.7% வாக்குகளைப் பெற்றது. அத்துடன் ஒப்பிடுகையில், தற்போது 15.1% வாக்குகளை இழக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 முதல் 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அமமுக 6.9% வாக்குகளையும், இதர கட்சிகள் 14.8% வாக்குகளையும் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அமமுக 1 முதல் 5 தொகுதிகளையும், இதர கட்சிகள் 5 முதல் 9 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
அதேபோல் புதுச்சேரியில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 45.8% வாக்குகளைப் பெறும் என்றும், 17 முதல் 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.