சட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் ‘தபால் ஓட்டு’ செலுத்த முடியும்..? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் சட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் தபால் வாக்கு செலுத்த முடியும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அரசுடன் இந்திய தேர்தல் ஆணையம் கலந்து பேசி, மேலும் சில நபர்களை அத்தியாவசிய சேவையின் கீழ் வரும் நபர்களாக அறிவிக்கிறது.
அதன்படி, ரெயிலை இயக்குபவர்கள் (லோகோ பைலட்), உதவி பைலட், மோட்டார் மென், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள் (டி.டி.இ), ஏசி பெட்டி உதவியாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை பணியாளர்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து பணியாளர்கள், வாக்குப்பதிவு அன்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஊடகத்தினர் ஆகியோரை அத்தியாவசிய சேவையின் கீழ் வரும் நபர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
தமிழக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, வாக்குப்பதிவு அன்று பணியில் இருப்பவராக சான்றளிக்கப்பட்டு, அந்த பணியின் மூலம் அவரால் தனது சொந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழ்நிலையில், அவரை அத்தியாவசிய சேவைப்பணியின் கீழ் வரக்கூடிய, தபால் ஓட்டளிப்பதற்கு தகுதியுள்ள நபராக கருதப்படுவார். அந்த வகையில் வாக்குச்சாவடிகளில் ஆஜராக முடியாத நபர்கள், தபால் மூலம் வாக்களிக்க விரும்பினால் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் 12-டி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்’ என சத்யபிரகு சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள், வாக்குப்பதிவு நடக்கும் சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்குகள் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வருவாய், சுகாதாரத்துறை, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
