சட்டமன்ற தேர்தலில் சென்னையில் களமிறங்கும் ராதிகா சரத்குமார்?.. எந்த தொகுதி தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ள தொகுதி குறித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, வரும் சட்டமன்ற தேர்தலை மக்கள் நீதி மய்யம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா சரத்குமார், ‘சரத்குமாருக்கு பயம் கிடையாது. அன்பு ஒன்றுக்கு மட்டுமே அவர் கட்டுப்படுவார். தொண்டர்கள் காட்டும் அன்பில் சாதிப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். நிறைய முடிவுகள் எடுத்துள்ளார். அதுகுறித்து விரைவில் அறிவிப்பார். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என அடித்துக்கூறுகிறேன். தலைவர் கட்டளையிட்டால் இந்த தேர்தலில் வேட்பாளராக நிற்பேன். கோவில்பட்டி, வேளச்சேரியில் நான் நிற்க வேண்டும் என நிறைய பேர் சொல்கிறார்கள். தலைவர் எங்கு சொல்கிறாரோ அங்கு நிற்பேன். எங்கள் இலக்கு வெற்றிதான்’ என அவர் பேசினார்.
இதனை அடுத்து பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் விவேகானந்தன், சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என தெரிவித்தார். தற்போது வேளச்சேரி தொகுதியில் திமுகவின் வாகை சந்திரசேகர் எம்எல்ஏ-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
