இந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 28, 2019 10:04 PM
மதுரை கோட்டத்தில், ரயில்வே பணியாளர்கள் இந்தி புத்தகங்களுடன் செல்ஃபி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட நெல்லை உள்ளிட்ட இடங்களில் 10 இந்தி நூலகங்கள் உள்ளன. இந்த நூலகத்தில், இந்தி நூல்கள் மட்டுமே இருப்பதால், பெரும்பாலான ஊழியர்கள் அங்கு சென்று படிப்பதில்லை. இந்த நூலகத்திற்கு ரயில்வே ஊழியர்களை வரவழைக்கும் நோக்கில், ‘புத்தகத்துடன் ஒரு செல்ஃபி’ என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
அதன்படி, ஊழியர்கள் மதுரை கோட்டத்திற்குட்பட்ட ஏதாவது ஒரு நூலகத்துக்குச் சென்று இந்தி புத்தகத்துடன் செல்ஃபி எடுத்து மதுரை ரயில்வே கோட்ட இந்தி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். எந்த ஊழியர் அதிகமாக ‘புத்தகத்துடன் செல்ஃபி’ எடுத்து அனுப்புகிறார்களோ, அவர்களுக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், மார்ச் மாத இறுதியில் பரிசுகள் வழங்குவார் என்றும், கலந்து கொள்பவர்கள் ஒரு நாளுக்கு ஒரு செல்ஃபி தான் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நெல்லை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இந்தி நூலகங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. 'புத்தகத்துடன் ஒரு செல்ஃபி' என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டமானது, இந்தி புத்தகங்களுக்கு மட்டுமே என கூறப்பட்டுள்ளது.
