'12 மணி நேரம் இறந்த கணவர் முன்னால அழுதுருக்காங்க...' 'கண் தெரியலானாலும் கண்மணி போல பார்த்துகிட்ட மனைவி...' தள்ளு வண்டியில் வாழ்ந்த தம்பதியின் வேதனை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையில் கண் தெரியாத பாட்டி உயிரிழந்த தன் கணவரின் சடலத்துடன் 12 மணி நேரம் உட்கார்ந்திருந்த சம்பவம் மைலாப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மைலாப்பூர் பகுதியில் ரோசாரி சர்ச் சாலையின் நடைபாதையில் வசித்து வருபவர்கள் தான் நடக்க முடியாத நிலையில் இருக்கும் தங்கப்பன் மற்றும் அவரது மனைவி பார்வையை இழந்த ஜெயா.
பல ஆண்டுகளாக இருவரும் அப்பகுதியில் இருப்பதால் அங்கிருக்கும் மக்களுக்கு இந்த தம்பதிகள் பரிச்சியப்பட்டவர்கள் என்று கூறுகின்றனர். மேலும் இவர்களுக்கு தேவையான உணவுகளை அப்பகுதி கொடுத்து உதவி வந்துள்ளனர். மேலும் தன்னார்வலர் ஒருவர் நடக்க முடியாத தங்கப்பனுக்கு ஒரு தள்ளு வண்டியையும் வாங்கி கொடுத்துள்ளார். அன்றிலிருந்து அவர்களுடைய சொந்த வீடானது அந்த தள்ளுவண்டி.
கடந்த சில நாட்களாக தங்கப்பன் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேலும் அப்பகுதி மக்களின் உதவியோடு நடக்கவியலாத தங்கப்பனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கேட்பாரற்று கிடக்கும் தன் கணவரை கண் தெரியாத ஜெயா எப்படியோ கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டு வந்துள்ளார். ஆனால் துருதாஷ்ட்ட வசமாக முருகப்பன் நேற்று உயிரிழந்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கொரோனா அச்சத்தால் அப்பகுதி மக்களும் முதியவரின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை, ஆனால் மாலை வாங்கி வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். எவ்வித நடவடிக்கையும் இன்றி கண் தெரியாத பாட்டி 12 மணி நேரமாக தன் கணவரின் சடலத்துடன் உட்கார்ந்து அழுதுள்ளார்.
அதையடுத்து மாலை 4 மணிக்கு பிறகு தான் முதியவரது உடலை காவல்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா எனவும் பரிசோதனைக்கு உட்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். பின்னர், பார்வையற்ற ஜெயா பாட்டியும் ஆதரவற்றோர் முகாமிற்கு மாநகராட்சி ஊழியர்கள் அழைத்து சென்றனர்.