'ரெண்டு வைரஸையும் அடிச்சு ஓட விட்ருக்காங்க...' 'மன தைரியத்தை பாராட்டி கைத்தட்டி ஆரவாரம் செய்த மருத்துவர்கள்...' 107 வயது பாட்டியின் கதை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 29, 2020 07:45 PM

தன்னுடைய 5 வயதிலும், 107 வயதிலும் வைரஸுகளை வென்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பாட்டி இணையங்களில் வைரலாகி வருகிறார்.

The 107-year-old grandmother who won two viruses

107 வயதான ஏனா டெல் வெல்லா என்னும் ஸ்பெயினைச் சேர்ந்த மூதாட்டி தன்னுடைய வாழ்நாள் காலத்தில் இரண்டு வைரஸ்களிலிருந்து மீண்டு தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸிற்கு முன்பு 1918-ல் கோடிக்கணக்கான மக்களை காவு வாங்கியது ஃப்ளூ என்னும் நோய் தொற்று. உலகம் முழுவதும் சுமார் 50 கோடி மக்களை பலி வாங்கிய இந்த வைரஸிலிருந்தும் தனது 5 வயதிலேயே மீண்டுள்ளார் ஏனா டெல் வெல்லா.

1913-ம் ஆண்டில் பிறந்த ஏனா, 5 வயதுச் சிறுமியாக இருக்கும் போது இவருக்கு ஸ்பானிஷ் ஃபுளூ தொற்றுநோய் தாக்கியது. பலி எண்ணிக்கை அதிகளவில் இருந்த போதும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ஏனா டெல், சிகிச்சைக்குப் பிறகு ஸ்பானிஷ் ஃபுளூ தொற்று நோயிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

ஏனா 2013 ஆம் ஆண்டு தனது 100 வயதை கடந்துள்ளார். தற்போது ஸ்பானிஷ் ஃபுளூ போலவே உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பலர் பாதித்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றால் பெரும்பாலும் உயிரிழந்தவர்கள் 60 வயதை தாண்டியவர்களே என்னும் தகவல்களும் வெளியாகி வருகிறது.

5 வயதில் ஸ்பானிஷ் ஃபுளூ தொற்றால் பாதிக்கப்பட்ட ஏனா, தற்போது தனது 107 வயதில் கொரோனா வைரசாலும் பாதிக்கப்பட்டுள்ளார். பின் மாட்ரிட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஏனா, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருவாரா என்னும் சந்தேகமும் ஏற்பட்டது.

அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் ஏனா தனது மன வலிமையாலும், தீவிர சிகிச்சையிலும் மருத்துவமனையில் இருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஏனா பாட்டியை மருத்துவமனை நிர்வாகம் ஆரவாரமாக கை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். முதியவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று வந்தால் அவ்வளவுதான் என்று கூறப்படும் நிலையில், 107 வயதான டெல், அதிலிருந்து மீண்டுவந்து உலகுக்குப் புதிய செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.

தனது மனோ தைரியத்தால் இரு கொடிய வைரஸிலிருந்து போராடி வெளியே வந்த ஏனா பாட்டிக்கு சமூகவலைதளங்களில் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.