‘சுற்றுலா சென்ற இடத்தில்’ காணாமல் போன.. ‘மனநலம் பாதித்த சிறுமிக்கு’ நடந்த பயங்கரம்..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Aug 15, 2019 10:38 PM
மலேசியாவில் கடந்த 10 நாட்களுக்கு முன் காணாமல் போன சிறுமி, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த நோரா (15) என்ற சிறுமி விடுமுறையைக் கழிக்க தனது பெற்றோருடன் மலேசியாவுக்கு சென்றுள்ளார். மனநலம் பாதித்தவரான நோரா கடந்த 4ஆம் தேதி தங்கியிருந்த விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதைத்தொடர்ந்து 10 நாட்களாக 214 பேர் கொண்ட குழு தீவிரமாகத் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்துள்ளது.
இந்நிலையில் 10வது நாள் மதியம் விடுதியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள வனப்பகுதியில் நீரோடை அருகே சிறுமி ஒருவரது சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆடைகளின்றி இருந்த அந்த சடலம் நோராவுடையதுதான் என அவருடைய பெற்றோரும் உறுதி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், “நோரா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்தத் தடயமும் இல்லை. நீண்ட நாள் பசி மற்றும் மன அழுத்தத்தால் அவருக்கு உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அல்சரால் குடலில் ஏற்பட்ட புண்களே அவரது இறப்புக்கு காரணமாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் நோரா எப்படி காணாமல் போனார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.