எமனாக மாறிய 'முல்லை' கேரக்டர்!?.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!.. விசாரணை வளையத்துக்குள் சின்னத்திரை நட்சத்திரங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சித்ரா தற்கொலை விவகாரத்தில் அவரது கணவர் மற்றும் உடன் பணியாற்றிய நடிகர், நடிகைகளிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

"பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரில் 'முல்லை' கேரக்டரில் நடித்து பிரபலமான டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா திடீரென தற்கொலை முடிவை எடுத்து தூக்கில் தொங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த ஹேம்நாத்துக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இதன் பிறகு இருவரும் நெருங்கி பழகி இருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு பல நேரங்களில் சித்ராவை ஹேம்நாத் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த அளவுக்கு இருவரும் அன்பாகவே இருந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணமும் செய்து கொண்டனர். ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென பதிவு திருமணம் செய்தது ஏன்? இத்தனை ஆண்டுகளும் திருவான்மியூர் வீட்டில் இருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்த சித்ரா ஓட்டலில் தங்கியது ஏன்? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகு கரையான்சாவடியில் உள்ள ஹேம்நாத் வீட்டில் சித்ரா தங்கியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், சித்ராவின் மரணம் தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகின்றன. மக்கள் மத்தியில் சித்ராவை பிரபலப்படுத்திய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" 'முல்லை' கேரக்டரே அவரது உயிருக்கு எமனாக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
'முல்லை' கேரக்டரில் 3-வது மருமகளாக நடித்த சித்ரா, கணவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப் பட்டதாகவும் அதில் ஹேம்நாத்துக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அது மோதலாக மாறி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதேநேரத்தில் திடீரென பதிவு செய்து கொண்டது ஏன்? என்பதும் பலத்த கேள்வியை எழுப்பி உள்ளது.
ஜனவரி மாதம் வரையில் திருமணத்துக்கு காத்திருக்காமல் சித்ரா- ஹேம்நாத் இருவரும் தங்களது கணவன்- மனைவி உறவை உறுதிப்படுத்துவதற்கு காரணமாக அமைந்த விஷயம் எது? என்பதும் மிகப் பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.
திருமணம் நிச்சயமான பிறகு சித்ரா-ஹேம்நாத் திருமணத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே இருவரும் பதிவு திருமணம் செய்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாகவும் முல்லை கேரக்டரால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாகவும் நசரத்பேட்டை போலீசார் அதிரடி விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினர். இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சித்ராவுடன் நண்பர்களாக பழகிய சின்னத்திரை நடிகர்- நடிகைகளிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட அன்று படப்பிடிப்பின்போது சித்ரா அடிக்கடி போனில் பேசியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அன்று முழுவதும் அவர் யார்-யாரிடம் போனில் பேசினார், அவருக்கு போன் செய்து பேசியவர்கள் யார்? என்பது போன்ற விவரங்களை சேகரித்துள்ள போலீசார் அனைவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், சின்னத்திரையில் பிரபலமாக உள்ள பல நடிகர்-நடிகைகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.
நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது முகத்தில் 2 இடங்களில் ஏற்பட்ட காயங்களும் சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால் அவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

மற்ற செய்திகள்
