'நெருங்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்'... 'நடிகர் விஜய் வீட்டில் நடந்த முக்கிய ஆலோசனை'... பரபரப்பு தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டார்கள். திரைத்துறை பிரபலங்கள் பலர் பாஜகவில் சேர இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் உலாவி கொண்டு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியுள்ளது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன. மதுரை, திருச்சி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் உரிய நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை சந்திரசேகர் கூறியிருந்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை, ஆட்சிக்கு ஒருவர் கட்சிக்கு வேறொருவர் என ரஜினி தெரிவித்து விட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதனிடையே திரைத் துறையிலிருந்து வந்த கமல்ஹான் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்தது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். அதேபோன்று திரைத்துறையில் இருந்து வந்த சீமான் ஆரம்பித்த நாம் தமிழர் கட்சியும் கடந்த தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றது.
இந்த சூழ்நிலையில் அதிமுக, திமுக என்ற இருபெரும் கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் என்பது அவ்வளவு எளிது அல்ல. அதேபோன்று கருணாநிதி, ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவர்கள் இல்லாத தமிழகத்தில் பெரும் வெற்றிடம் இருப்பதாகவே பலரும் கருதுகிறார்கள். எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் பெரும் தலைவராக அவர் உருவாகுவார் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனிடையே திருச்சியில் நாளைய முதல்வரே என்று விஜய்க்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதும் இந்த பரபரப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. அந்த போஸ்டரில், ''விஜய் முதலமைச்சர் என்று சொல்லும் வகையில் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்களுக்கு விஜய் புகைப்படத்தை அச்சிட்டு, இருபெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும், இளம் தலைவரே நாளைய தமிழக முதல்வரே, 2021 உங்கள் தலைமையில் அமையட்டும், தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்'' என்கிற வாசகங்களுடன் திருச்சியின் பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் ஒருபுறம் இருக்கத் தமிழகச் சட்டமன்ற தேர்தலும் நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
