'கையில 6 டாலர் தான் இருந்துச்சு'...'அவர் மட்டும் இல்லன்னா'...'ஐயோ நெனச்சுக்கூட பாக்க முடியால' ...நெகிழ்ந்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Sep 02, 2019 11:24 AM
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் உதவி மட்டும் கிடைக்காவிட்டால், நான் இந்நேரம் என்ன நிலையில் இருந்திருப்பேன் என என தெரியாது என, இளம் டென்னிஸ் வீரர் சுமித் நாகல் நெகிழ்ந்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டின் ஒற்றையர் பிரிவில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அளவில் தற்போது பிரபலமாகி இருப்பவர் இளம் வீரர் சுமித் நாகல். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தேர்வாகி அசத்திய அவர், தனது முதல் போட்டியிலேயே உலகின் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்டார்.
அந்த போட்டியில் ஃபெடரருக்கு எதிராக முதல் செட்டைக் கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இருப்பினும் அந்த போட்டியில் நாகல் தோல்வி அடைந்தார். இருந்த போதும் உலக டென்னிஸ் அரங்கில் தனது திறமையான ஆட்டத்திறன் மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இதனிடையே போட்டிக்கு பின்பு பேசிய பெடரர், ''நாகல் எனக்கு கடுமையான சவாலை அளித்தார். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது'' என பாராட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் நாகல் இந்த நிலையை அடைய கடுமையான பாதையை தாண்டி வந்துள்ளார். அதற்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் அறக்கட்டளை, பெரிய உதவியினை செய்திருக்கிறது.
இதுகுறித்து பாம்பே டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய ஸ்மித் நாகல் '' நான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தேன். அப்போது விராட் கோலி அறக்கட்டளை கடந்த 2017ம் ஆண்டு முதல் எனக்கு உதவி வருகிறது. விராட் கோலி, எனக்கு சரியான சமயத்தில் உதவவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு தொடரை முடித்துவிட்டு கனடாவில் இருந்து ஜெர்மனிக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது எனது கையில் வெறும் 6 டாலர்கள் மட்டுமே இருந்தது. எனக்கு உதவி கிடைத்த பின்பும் என்னிடம் அவ்வளவுதான் பணம் இருந்தது. அப்படி என்றால் எனது பழைய சூழ்நிலையை எண்ணி பாருங்கள். ஆனால் தற்போது சூழ்நிலை மாறியிருக்கிறது. சரியான தருணத்தில் எனக்கு உதவிய விராட் கோலியை என்னால் மறக்க முடியது'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்