'ஆல் ரவுண்டராக பல சாதனைகள் புரிந்தும்'... 'இந்திய அணியில் இடம் பிடிக்காத ஒரே வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 29, 2019 01:33 PM
பிசிசிஐ-யின் சிறந்த ஆல்ரவுண்டர் விருதைப் பெற்றும், பல சாதனைகளுடன், வேதனையான சாதனை படைத்துள்ளார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ஜலஜ் சக்சேனா.

இவர் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். துலீப் கோப்பைப் போட்டியில் இந்திய ப்ளூ மற்றும் இந்தியா ரெட் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் இந்தியா ப்ளூ அணி சார்பாக விளையாடிய சக்சேனா, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 6000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்த 19-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
இவருக்கு முன்னால் இதைச் சாதித்த கபில் தேவ், ரவி சாஸ்திரி, சஞ்சய் பாங்கர், பாலி உம்ரிகர் உள்ளிட்ட 8 பேரும் இந்தியாவுக்காக தேசிய அணியில் விளையாடி உள்ளனர். சக்சேனா மட்டுமே, இந்திய தேசிய அணியில் இடம்பெறாத ஒரே வீரராக உள்ளார். இதுவரை 113 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜலஜ் சக்சேனா 6,044 ரன்களும், 305 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
இதன்மூலம் முதல் தர போட்டியில் சாதனைப்படைத்தும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத ஒரே வீரர் என்ற மோசமான அரிய வகை சாதனையை படைத்துள்ளார். இவர், ஐபிஎல் டெல்லி அணியின் வீரராக கடந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
