‘40 பந்துகளில் 105 ரன்கள்’.. கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த தமிழக வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 30, 2019 10:05 PM
ருமேனியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சிவக்குமார் பெரியாழ்வார் என்ற வீரர் 40 பந்துகளில் சதமடித்து கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
ருமேனியா மற்றும் துருக்கி அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி ருமேனியாவில் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த ருமேனியா அணி 20 ஓவர்களில் 226 ரன்களை குவித்தது. ருமேனியா அணியின் சார்பாக பேட்டிங் செய்த தமிழக வீரர் சிவக்குமார் பெரியாழ்வார் 40 பந்துகளில் 105 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். இதனை அடுத்து பேட்டிங் செய்த துருக்கி அணி 13 ஓவர்களில் 53 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ரூமேனியா அணி 173 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிவகாசியை சேர்ந்த மென்பொறியாளரான சிவக்குமார் பெரியாழ்வார் கடந்த 2015 -ம் ஆண்டு ருமேனியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு இவர் அளித்த பேட்டியில், ‘நான் இந்தியாவில் அண்டர் -15, 22, 25 போன்ற கிரிக்கெட் தொடர்களில் விளையாடி உள்ளேன். என்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பிறகு 2015 -ம் ஆண்டில் ருமேனியாவுக்கு குடிபெயர்ந்தேன். கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததால் இங்குள்ள கிரிக்கெட் போட்டிகள் பற்றி விசாரித்து குளூஜ் கிரிக்கெட் கிளப்பில் இணைந்தேன்’ என தெரிவித்துள்ளார்.