‘‘தல’கிட்டதான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன்’!.. தோனியை புகழ்ந்த புதுமுக வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 27, 2019 01:50 PM
தோனியிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விஜய்சங்கர் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதல்முறையாக இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் தோனியிடம் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர் கௌரவ் கபூருக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனி குறித்தும் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அவரது பங்களிப்பு குறித்தும் கூறியுள்ளார். அதில், கடினமான சூழல்களையும் அமைதியாக எதிர்க்கொள்வது குறித்த அவரிடம் எழுப்பப்பட்டது.
இதையடுத்து, அதற்குப் பதிலளித்த விஜய் சங்கர், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதை நான் மகேந்திரசிங் தோனியிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். ‘அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தால் எந்தச் சூழலையும் நம்மால் கையாள முடியும். உன்னுடைய வேலையில் நீ கவனம் செலுத்தினாலே, மற்ற விஷயங்கள் தன்னால் நடக்கும்’ என்று தோனி என்னிடம் சொல்லியிருக்கிறார்.
மேலும், மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டிதான் என்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டி. மெல்போர்ன் மைதானம் மிகப்பெரியது. அதுபோன்ற மிகப்பெரிய மைதானங்களில் அதற்கு முன் நான் விளையாடிதில்லை என்பதால், அந்த மைதானத்துக்குள் செல்வதே எனக்குப் பெரிய விஷயமாக இருந்தது.
இந்நிலையில், அப்போது பந்துவீசும் வாய்ப்பு எனக்கு வந்தது, இதையடுத்து, என் மீது பெரிய அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தேன். அப்போது என் அருகில் வந்த தோனி `எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டாம். சரியான லென்த்தில் பந்தை வீசு' என்றார். அது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால், அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அது தேவையானதாக இருந்தது. மேலும், தொடர்ந்து சிறப்பாக பந்துவீச தோனியின் நம்பிக்கை எனக்கு உதவியது'' என்று விஜய்சங்கர் தெரிவித்துள்ளார்.
