‘இந்திய அணிக்கு தனியாக'... 'ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் தேவை'... 'போட்டியிடும் முன்னாள் இந்திய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 07, 2019 11:16 AM
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி விண்ணப்பித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில், இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி, இந்திய பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். சுனில் ஜோஷி ஏற்கெனவே வங்கதேச அணிக்கு இரண்டரை ஆண்டுகாலம் பயிற்சியாளராக இருந்து அனுபவம் பெற்றவர்.
இதற்கிடையே செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஆம் நான், இந்தியப் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளேன். வங்கதேசத்துக்காக இரண்டரை ஆண்டுகள் பயனுள்ள பயிற்சிக்காலத்திற்குப் பிறகு, அடுத்த சவாலுக்கு நான் தயாராகவே இருக்கிறேன். கொஞ்ச காலமாக இந்திய அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின் கோச் இல்லை. இங்கு என்னுடைய அனுபவம் பரிசீலிக்கப்படலாம். பெரும்பாலான அணிகள் வேகப்பந்து வீச்சாக இருந்தாலும், ஸ்பின்னாக இருந்தாலும் சிறப்பு வாய்ந்தவர்களை பணிக்காக வைத்திருக்கின்றனர்.
இந்திய அணிக்கும் ஒருவர் தேவை. அது நானாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ஸ்பின் கோச் தேவை. மேலும், எந்த ஒரு சர்வதேச அணியும் ஸ்பின் கோச் தேவையில்லை என்று நினைத்தால் அது தவறு’ என்றார். ஜோஷி 1996 முதல் 2001 வரை இந்திய அணியில் பெரிய வீரர்களுடன் ஆடியுள்ளார். 15 டெஸ்ட்டில் 41 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 615 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
