‘பந்துவீசும் முன்பே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்..’ தேர்வுக்குழுவை வறுத்தெடுத்த பிரபல வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 05, 2019 11:36 AM
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளும் மோதும் கடைசி போட்டி செவ்வாய்க்கிழமை கயானாவில் நடைபெற இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. முதல் போட்டியிலேயே சைனி 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் டி20 வரலாற்றிலேயே கடைசி ஓவரை மெய்டனாக வீசிய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அணியில் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசக்கூடிய ஒரே வலதுகை பந்துவீச்சாளர் சைனி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சைனியின் திறமையைப் பார்த்து அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டுமென நீண்ட நாட்களாக கவுதம் கம்பீர் வலியுறுத்தி வந்தார். அதுமட்டுமில்லாமல் சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வேண்டுமெனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் ரஞ்சி அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் வீரர்களான பிஷன்சிங் பேடி, சேட்டன் சவுகான் ஆகியோர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என சைனியை அணியில் சேர்க்க மறுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சைனி தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளதால் பிஷன்சிங் பேடி, சேட்டன் சவுகான் இருவரையும் கவுதம் கம்பீர் ட்விட்டரில் வறுத்தெடுத்துள்ளார். இது குறித்த அவருடைய பதிவில், “இந்திய அணியில் அறிமுகமாகியுள்ள நவ்தீவ் சைனி பந்துவீசுவதற்கு முன்பே பிஷன்சிங் பேடி, சேட்டன் சவுகான் என்ற இரண்டு விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். விளையாடுவதற்கு முன்பே சைனியின் கிரிக்கெட்டுக்கு இரங்கல் தெரிவித்த அவர்கள் இருவரின் மிடில் ஸ்டெம்ப், அவருடைய அறிமுகத்தால் போல்டாகி காணாமல் போயுள்ளது. வெட்கக்கேடு” எனக் கூறியுள்ளார்.
Kudos Navdeep Saini on ur India debut. U already have 2 wkts even before u have bowled— @BishanBedi & @ChetanChauhanCr. Their middle stumps are gone seeing debut of a player whose cricketing obituary they wrote even before he stepped on the field, shame!!! @BCCI pic.twitter.com/skD77GYjk9
— Gautam Gambhir (@GautamGambhir) August 3, 2019