கண்டிப்பா வருவேன்.. ‘ரகசிய ஆசையை உடைத்த பிரபல வீரர்..’ உற்சாகத்தில் ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 03, 2019 04:28 PM
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ள போதிலும், மீண்டும் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ரவி சாஸ்திரி மீது அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் கேப்டன் விராட் கோலி மட்டும் மீண்டும் அவரே பயிற்சியாளராக வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற கனவு உள்ளதாக முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அவர், “நிச்சயமாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இப்போது கிடையாது. எதிர்காலத்தில் பயிற்சியாளருக்கான போட்டியில் என்னுடைய பெயரும் இருக்கும்.
தற்போது கிரிக்கெட் தொடர்பான பல விஷயங்களில் பணியாற்றி வருகிறேன். ஐபிஎல், பெங்கால் கிரிக்கெட் மற்றும் வர்ணனை எனப் பல பணிகள் இருக்கிறது. இது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக முடித்துவிட்டு ஒரு கட்டத்தில் நானும் முயல்வேன். நிச்சயமாக அதில் எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு இல்லை என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.
சவுரவ் கங்குலியின் இந்தக் கருத்து அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ‘தாதா’ கங்குலி இந்திய அணிக்கு கட்டாயம் தேவை என ரசிகர்கள் தற்போதே கொண்டாட்ட மனநிலைக்கு வந்துள்ளனர்.