‘உங்க நாட்லயே உலகக் கோப்பைய தொட்டுப் பார்த்த ஒரே ஆள்..’ தென் ஆப்பிரிக்காவைக் கலாய்த்த இந்திய ரசிகர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 04, 2019 06:24 PM
ஜூன் 5ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது முதல் உலகக் கோப்பை போட்டியை விளையாட உள்ள நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பையில் ஏற்கெனவே இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடி தோல்வியடைந்துள்ள தென் ஆப்பிரிக்கா நாளை இந்தியாவுடன் விளையாட உள்ளது. நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்திலுள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்தியாவும் முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று சிறப்பாக தொடங்க வேண்டிய நிலையில் உள்ளது.
1992ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பையில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதே இல்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவைக் கலாய்க்கும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் தங்கள் நாட்டு அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவர் பெயராக சொல்லி உற்சாகமடைகின்றனர். அப்போது இந்திய ரசிகர் ஒருவர், “நீங்கள் தான் உலகக் கோப்பையை வென்றதே இல்லையே? அப்படி இருக்க எதைக் கொண்டாடுகிறீர்கள்? உங்கள் நாட்டிலிருந்து ஒரேயொருவர் தான் (கேரி கிறிஸ்டன்) உலகக் கோப்பையைத் தொட்டுப் பார்த்துள்ளார். அதற்காக நீங்கள் இந்தியாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” எனக் கூறுமாறு உள்ளது அந்த விளம்பரம்.
2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தவர் தென் ஆப்பிரிக்க அணியின் கேரி கிறிஸ்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள யுவராஜ் சிங், “ஏப்ரல் 2, 2011 மறக்க முடியாத ஒரு இரவு. அதை சாத்தியமாக்கியதில் தென் ஆப்பிரிக்காவின் பங்கும் உள்ளது. நன்றி கேரி. ஜூன் 5ஆம் தேதி பார்ப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
April 2, 2011 - A night I can never forget, and a night that one South African played a key part in making it possible!#ThankYouGary and see you on June 5, #SA! 😎 @Gary_Kirsten
India hi #LeJayenge #CricketKaCrown, @StarSportsIndia par! pic.twitter.com/K2vk1z4Hqw
— yuvraj singh (@YUVSTRONG12) May 30, 2019