‘மறுபடியும் கேப்டன் பொறுப்பு?’ விட்ட இடத்த பிடிக்க வாய்ப்பு இருக்கா? வெளியான அதிரடி தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 08, 2019 10:25 PM
ஆஷஸ் தொடரில் கலக்கி வரும் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து 2 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக 1 வருடம் தடை முடிந்து விளையாடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மீண்டும் தொடர்வது குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர், ‘ஸ்மித், வார்னர், ஃபான்கிராப்ட் மூவரும் அணிக்கு திரும்பியது சந்தோசமாக உள்ளது. இவர்கள் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்போது டிம் கேப்டன் பொறுப்பை சிறப்பாக செய்து வருகிறார். அதனால் அடுத்த கேப்டன் குறித்து இப்போது ஏதும் பேசவில்லை’ என தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் ஃபான்கிராப்ட் ஆகிய மூவருக்கும் 1 வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் இதில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு கூடுதலாக, தடை முடிந்த அடுத்த ஒரு வருடத்துக்கு கேப்டன் பொறுப்பில் இருக்க கூடாது என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.