'டெஸ்ட்' மேட்ச்'ல மோசமான 'பேட்டிங்'... வச்சு செஞ்ச 'நெட்டிசன்கள்'... 'பக்கா'வான 'பதிலடி' கொடுத்த இந்திய 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, 191 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதன் பின்னர் 53 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 36 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து ஆல் அவுட்டான நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது.
பின்னர் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டம் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் ப்ரித்வி ஷா, இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல், ஒரே மாதிரி தான் அவுட்டாகி இருந்தார்.
இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டிக்கு அவர் இடம்பெற்றிருந்த போதே சுப்மன் கில்லை அணியில் எடுக்காமல் ப்ரித்வி ஷாவை ஏன் அணியில் எடுத்தீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். போட்டி முடிவுக்கு பின்னர் அவரது ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் அவரது பேட்டிங்கை மேலும் விமர்சனம் செய்து அதிகம் மீம்ஸ்களை பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ப்ரித்வி ஷா பகிர்ந்துள்ளார். 'சில சமயம் நீங்கள் செய்ய முயற்சிக்கும் காரியத்திற்கு மக்கள் உங்களை தாழ்த்தி பேச ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களால் செய்ய முடியாத காரியத்தை உன்னால் செய்ய முடியும் என அர்த்தம்' என குறிப்பிட்டுள்ளார்.