"'கிரிக்கெட்' ஆடச் சொன்னா... எல்லாரும் 'கிறிஸ்துமஸ்' 'மூட்'ல இருக்காங்க போல... 'இந்திய' அணியை கடுமையாக சாடிய 'சுனில் கவாஸ்கர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. ப்ரித்வி ஷா 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மயங்க் அகர்வால் 5 ரன்களுடனும், பும்ரா ரன் ஏதும் அடிக்காமலும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்திய அணி பல கேட்ச்களை தவற விட்டது. அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சக்னேவுக்கு மட்டும் 3 கேட்ச்களை இந்திய வீரர்கள் தவற விட்டிருந்தனர். இந்திய அணி சிறப்பாக ஃபீல்டிங் செய்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு நிச்சயம் அதிக நெருக்கடி கொடுத்திருக்கலாம்.
இதற்கு முன்பு நடைபெற்றிருந்த ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களிலும் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. தற்போது, மிக முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடரிலும் இப்படி மோசமாக ஃபீல்டிங் செய்து வருவது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அதிருப்திக்குள் ஆக்கியுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்து வரும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்து வர்ணனையின் போது விமர்சனம் செய்துள்ளார்.
'இந்திய அணி வீரர்கள் அனைவரும் தற்போதே கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மனநிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு வாரம் முன்னதாகவே அவர்கள் கிறிஸ்துமஸ் பரிசை அளித்து வருகின்றனர்' என இந்திய அணியின் ஃபீல்டிங்கை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.