"ஆக்ரோஷமில்ல... என்ன நடந்தாலும் 'சிரிச்சிட்டே' இருக்கீங்க எப்படிங்க இது??..." தமிழிலேயே 'பதில்' சொல்லி... ரகசியம் உடைத்த 'நடராஜன்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 தொடரில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற மற்றொரு தமிழக வீரரான நடராஜன் அறிமுக தொடரிலேயே தனது பந்து வீச்சால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் யார்க்கர் பந்துகளால் அற்புதம் செய்த நடராஜன், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடரிலும் சிறப்பாக பந்து வீசி மேக்ஸ்வெல் உட்பட பல முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
டி 20 தொடரின் இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போதும் தொடரை வென்றுள்ளது. மூன்று டி 20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை நடராஜன் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த நிலையில், இன்றைய போட்டி முடிவுக்கு பின்னர் தொடர் நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா, அதனை நடராஜனுக்கு அளித்து அவரை சிறப்பித்தார். அதே போல, டி 20 தொடர் கோப்பையையும் இந்திய கேப்டன் விராட் கோலி, நடராஜன் கையில் வழங்கினார்.
தமிழக வீரரான நடராஜனுக்கு சர்வதேச தொடரில் ஆரம்பமே அமர்க்களமாகவும், நெகிழ்ச்சிகரமாகவும் அமைந்துள்ளது. இதனையடுத்து போட்டிக்கு பின்னர் நடராஜன் தமிழில் பேசினார். 'ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக அறிமுக தொடர் அமைந்ததுடன் அதில் சிறப்பாக பந்து வீசியது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆரம்பத்தில் அணியில் இடம் கிடைத்த போது பெரிதாக எதுவும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு தெரிந்த விஷயத்தை அப்படியே இந்த தொடரில் செய்ய நினைத்தேன். அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்.
எனது பலமான யார்க்கர் மற்றும் ஸ்லோ பந்துகள் வீசுவதில் மட்டும் அதிக கவனம் செலுத்தினேன். மற்றபடி பந்து வீச வரும் போது, கேப்டனுடன் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து விவாதிப்பேன். ஐபிஎல் தொடர்களில் நான் என்ன செய்தேனோ, அதைத் தான் நானும் இங்கு சிறப்பாக செய்து காட்டினேன்' என்றார்.
விக்கெட்டுகள் எடுக்கும் போதும், பவுண்டரிகள் போகும் போதும் அமைதியாக எப்படி இருக்கிறீர்கள்? என வர்ணனையாளர் கேட்ட போது, 'என்னிடம் நிறைய பேர் இது தொடர்பாக கேட்டிருக்கிறார்கள். கிரிக்கெட் ஆட ஆரம்பிக்கும் போதே நான் அப்படியே இருந்து பழகி விட்டேன். அதனால் என்னால் ஆக்ரோஷமாக ஆடத் தெரியாது. ஒரு சிறிய புன்னகையுடன் நான் கடந்து சென்று விடுவேன்' என தெரிவித்தார். போட்டிக்கு பின்னர் தமிழில் நடராஜன் பேசியது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
