'தோள் கொடுக்க தாய் தந்தையர் இல்லை'!.. 'ஓடத் துடிக்கும் கால்களுக்கு ஷூ இல்லை'!.. ஓடி ஓடியே ஒலிம்பிக்-ஐ அடைந்த அசாத்திய கனவு!.. யார் இந்த ரேவதி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெற்றோரை இழந்து வறுமையான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையிலும், பயிற்சியாளரின் உறுதுணையுடன் தன் திறமையால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி. டோக்கியோவை நோக்கிய இவரின் பயணம் நம் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தரவல்லது.

மதுரை சத்தியமங்கலத்தை சேர்ந்தவர், 23 வயதாகும் ரேவதி வீரமணி. தனது 4 வயதில் பெற்றோரை இழந்துவிட்டதால், அதற்குப்பின் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார் ரேவதி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், 2-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு படித்தபோது, காலில் ஷூ இல்லாமல் மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரேவதி பங்கேற்று இருக்கிறார். அப்போது மதுரை அரசு ரேஸ்கோர்ஸ் மைதான பயிற்சியாளராக இருந்த கண்ணன், ரேவதியின் திறமையைக் கண்டு பயிற்சியளிக்க முன்வந்துள்ளார். தொடக்கத்தில் அவரது பாட்டி ஆரம்மாள் ரேவதியை விளையாட்டுக்கு அனுப்ப முன்வராத நிலையில், அவரிடம் மாணவியின் திறமையைப் பற்றி எடுத்துக் கூறி பின்னர் சம்மதிக்க வைத்துள்ளார், பயிற்சியாளர் கண்ணன்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்ததால் ரேவதிக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கண்ணன் பயிற்சி அளித்திருக்கிறார். தொடர்ந்து ரேவதிக்கு கல்லூரி படிப்பை தொடரவும் அவருக்கு தேவையான உதவிகளை அவர் செய்துள்ளார். கல்லூரிப் படிப்புக்கு மட்டுமன்றி, உணவு ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில், ரேவதியின் பாட்டிக்கு தேவையான ஆதரவையும் வழங்கியிருக்கிறார் கண்ணன்.
தனக்கு கிடைத்த உதவியை முறையாக பயன்படுத்திக் கொண்ட ரேவதி, தொடர்ந்து தடகளத்தில் சாதனை படிக்கல்லை எட்டும் முனைப்புடன் உழைத்துள்ளார். தன் சாதனை பயணத்தை 2016 கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் தொடங்கியுள்ளார். அந்தப் போட்டியில், 100 மற்றும் 400 மீட்டர் தடகள போட்டியில் முதல் இடத்தை பிடித்தவர், பின் 2019 ஆசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றார். அதோடு 2019ல் உலக சாம்பியன்ஷிப்பிலும் கலந்து கொண்டார். இதன் பலனாக, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பாட்டியாலா பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார் ரேவதி.
இதற்கிடையில் மதுரை தெற்கு ரயில்வேயில் அவருக்கு பணியும் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற ரேவதி கடந்த ஞாயிறு அன்று நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் தடகள போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
தன் சாதனை பயணம் குறித்து பேசிய ரேவதி, "குடும்ப சூழலால் பாட்டி என்னை சிறுவயதிலேயே விடுதியில் சேர்த்துவிட்ட நிலையில், பல சிரமங்களுக்கு இடையில் போட்டியில் கலந்துக்கொண்டேன். ஷு கூட இல்லாமல் வெறும் காலில் போட்டியில் கலந்துக்கொள்வேன். அதைப் பார்த்த பயிற்சியாளர் கண்ணன், எனக்கு ஊக்கமளித்து பயிற்சியும் அளித்தார். தொடர் பயிற்சியால், தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளேன். இதில் வெற்றி பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் தனது பேத்தியை போட்டிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வந்ததாகவும், பின் அவரின் திறமையை கண்டு பயிற்சியாளர் வற்புறுத்தியதன்பேரில்தான் அனுமதித்ததாகவும் ரேவதியின் பாட்டி ஆரம்மாள் கூறியுள்ளார். ஏழ்மையான நிலையில் உணவிற்கு கூட வழியின்றி கடன் பெற்று தனது பேத்திக்கு தேவையான விளையாட்டு செலவை மேற்கொண்டதாகவும் அவர் கூறுகிறார். தற்பொழுது ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது தங்களுக்கு மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக அவரது பாட்டி ஆரம்மாள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ரேவதியை பயிற்சி பெறும் மாணவியாக பார்க்காமல், தனது குடும்பத்தில் ஒருவராகவே பார்த்ததாகவும், அதனாலேயே அவருக்கு தேவையான பயிற்சிகளையும், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்ததாககவும் அவரது பயிற்சியாளர் கண்ணன் கூறியுள்ளார்.
மேலும், ரேவதியின் இடைவிடா கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாகவே ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதிபெற்றிருப்பதை கருதுவதாகவும், அவருக்கு வறுமை குறித்த கவலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேவையான ஆலோசனைகளையும், தைரியத்தையும் தொடர்ந்து வழங்கி வந்ததாகவும் கூறுகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் பரிசு வென்று நிச்சயம் சாதனை படைப்பார் என்ற நம்பிக்கையோடு இருப்பதாகவும் பயிற்சியாளர் கண்ணன் கூறுகிறார். மதுரையிலிருந்து இதுவரை யாரும் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றதில்லை என்பதால், தன் மாணவி ரேவதியே அந்த பெருமையை தன்வசப்படுத்தியிருக்கும் முதல் நபர் என்றும் பெருமிதம் கொள்கிறார் கண்ணன்.
மதுரையில் சிறு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, வாழ்க்கையில் கடினமான போராட்டங்களை சந்தித்து, ஒலிம்பிக் வரை முன்னேறியிருக்கும் ரேவதியின் சாதனை ஓட்டம் சர்வதேச அளவிலும் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

மற்ற செய்திகள்
