‘இதுக்காகத் தான் நான் விளையாடுறேன்’... 'மனம்திறந்த பிரபல தமிழக வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 02, 2019 01:03 PM
இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பதில், எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என தொடக்க வீரர் முரளி விஜய் கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் சர்வதேச போட்டிகளில், இந்திய அணிக்காக 17 ஒரு நாள் போட்டிகளிலும், 61 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் முக்கிய வீரராக முரளி விஜய் உள்ளார். 35 வயதான முரளி விஜய், கடைசியாக இந்திய அணிக்காக, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருந்தார். இந்நிலையில், சென்னையில் நடைப்பெற்ற, ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 தொடரின் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில், முரளி விஜய் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என நினைத்துக் கொண்டு, எனக்கு நானே அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். சுயஆர்வம் மற்றும் பெருமைக்காகத் தான் கிரிக்கெட் விளையாடுகிறேன். மிகப்பெரிய பங்களிப்பை எனது போட்டிகளில் கொடுத்து வருகிறேன். இந்திய அணிக்காகவோ அல்லது உலக அளவில் விளையாடுவதையோ நான் எதிர்நோக்கவில்லை. எனது கவனம் உயர்மட்ட அளவிலான கிரிக்கெட் விளையாடுவதுதான். அதனால் எந்தவிதமான கிரிக்கெட்டாக இருந்தாலும் எனக்கு நல்லது தான்.
எந்த அணிக்காக விளையாடுகிறேனோ, அந்த அணிக்கு பங்களிப்பு செய்வதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதைதான் நான் செய்துள்ளேன். நீண்ட காலத்துக்குப் பின் நானும், தினேஷ் கார்த்திக்கும், விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியில் விளையாடுகிறோம். இது சிறந்த போட்டியாக அமையும். தமிழகம் சிறந்த அணி என்பதை நிரூபிக்க உள்ளோம்’ என்றார். இதற்கிடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில், சோமர்செட் அணி பங்கேற்கும் கடைசி 3 ஆட்டங்களில் முரளி விஜய் களமிறங்க உள்ளார்.
