‘இன்னும் விளையாட நிறைய இருக்கு’.. திடீரென ‘யு டர்ன்’ அடித்த ‘பிரபல இந்திய வீரர்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 30, 2019 12:36 PM
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அம்பதி ராயுடு திடீரென தனது முடிவிலிருந்து மாறி மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் மனம் வெறுத்த ராயுடு திடீரென அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். ராயுடுவின் இந்த முடிவுக்கு பிசிசிஐ தான் காரணம் என குற்றம்சாட்டிய பிரபல வீரர்கள் பலரும் அவர் தனது முடிவை திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அம்பதி ராயுடு தனது ஓய்வு முடிவிலிருந்து மாறி மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்புக்கு அம்பதி ராயுடு அனுப்பியுள்ள மின் அஞ்சலில், “நான் உணர்ச்சிவசப்பட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டேன். தற்போது அந்த முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட விருப்பமாக இருக்கிறேன் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
மிகவும் கடினமான நேரத்தில் என்னுடன் துணை இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விவிஎஸ் லட்சுமண், நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி இன்னும் நான் விளையாடி சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளார்கள். செப்டம்பர் 10ஆம் தேதியில் இருந்து நான் ஹைதராபாத் அணியில் இணைய தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
