'அத்துமீறிய கேப்டன் விராட் கோலி'... 'அதிரடி காட்டிய ஐசிசி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 23, 2019 04:55 PM
ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியின்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
உலகக் கோப்பைத் தொடரின் 28-வது லீக் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் கடந்த சனிக்கிழமையன்று மோதின. சௌதாம்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின்போது, நடுவர் அலீம் டேர் சந்தேகத்துக்குரிய எல்.பி.டபுள்யூ. தரமறுத்தார். இதனையடுத்து கேப்டன் விராட் கோலி நடுவரிடம் அது அவுட் தான் என ஆக்ரேஷமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
ஐசிசி விதியின்படி விராட் கோலி நடுவரிடம் அத்துமீறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக, போட்டியின் சம்பளத்தில் 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தவறை கோலி ஏற்றுக்கொண்டதால், அவர் மீது எந்த விசாரணையும் நடத்தப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக வழங்கப்படும் டிமெரிட் புள்ளி ஒன்றையும், விராட் கோலி பெற்றார். இது விராட் கோலிக்கு 2-வது டிமெரிட் புள்ளியாகும்.
ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிடோரியாவில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரானப் போட்டியின் போது விராட்கோலிக்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால், அந்தப் புள்ளிகள் சஸ்பெண்ட் புள்ளிகளாக கணக்கிடப்படும். 2 சஸ்பெண்ட் புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் போட்டிக்கோ அல்லது 2 ஒருநாள் போட்டிக்கோ அல்லது ஒரு டி20 போட்டிக்கோ தடை விதிக்க முடியும். இது எது முதலில் வருகிறதோ அது பொருந்தும்.