'இந்தியா-ஆஃப்கானிஸ்தான் போட்டி'... 'மழைக்கு வாய்ப்பு?'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 21, 2019 03:54 PM
சௌதாம்டனில் நடைபெறவுள்ள இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. ஐசிசி உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில், மழையினால் அதிகம் பாதிக்கப்பட்ட தொடராக இவ்வருட உலகக்கோப்பை அமைந்துள்ளது. ஏற்கனவே மோசமான வானிலையால் 4 போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. மழையினால் பாதிக்கப்பட்ட போட்டிகளுக்கு மாற்று நாட்களை அறிவிக்காமல், புள்ளிகளை ஐசிசி பகிர்ந்து அளித்து வருகிறது.
விட்டுவிட்டு பெய்த மழையால் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியிலும் ஆட்டம் தடைப்பட்டது. எனினும் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 89 ரன்களில் வெற்றிப்பெற்றது. இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம், சனிக்கிழமையன்று சௌதாம்டனில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக கடந்த இருநாட்களாக இந்திய அணி வலைப்பயிற்சி மேற்கொள்ள இருந்தது. ஆனால் மழையின் குறுக்கீடு காரணமாக வலைப்பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் சௌதாம்டனில் சனிக்கிழமையன்று இந்திய- ஆஃப்கானிஸ்தான் போட்டி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியன்று காலையில் 4 சதவிகித மழை பொழிய வாய்ப்புள்ளது. ஆனால் ஆட்ட நேரத்தில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போட்டியை முழுவதும் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.