‘இவ்வளவு மோசமா நான் எங்கயுமே பாத்ததில்ல..’ புலம்பித் தள்ளிய இந்திய வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 21, 2019 01:40 PM
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது இந்திய அணி.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை நடைபெற்று வரும் இங்கிலாந்து பவுலர்களுக்கு சொர்க்கபுரி, இங்கு பந்துகள் ஸ்விங் ஆகும் என்பவை பொய்யோ எனத் தோன்ற வைத்துள்ளார் இந்திய வீரர் ஜஸ்ப்ரிட் பும்ரா.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பும்ரா, “நான் இதுவரை ஆடிய குறைந்த ஓவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுகளில் இங்கிலாந்து போல வெறும் மட்டைப் பிட்சுகளைப் பார்த்ததில்லை. இந்தப் பிட்சுகளால் பவுலர்களுக்கு எந்தவொரு உதவியும் இல்லை. இங்கு ஸ்விங்கும் இல்லை, வேகமும் இல்லை. நாம் நம் துல்லியத்திலும், கட்டுக்கோப்பிலும்தான் வீச வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “சவுத்தாம்டனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து புதியதாக இருந்ததால் கொஞ்சம் பவுலிங்குக்கு உதவியாக இருந்தது. பந்து லேசாகப் பழசானாலும் அது பேட்டிங்கிற்கு சாதகமே. ஆனால் இதையெல்லாம் முன்கூட்டியே யோசிக்கக் கூடாது. ஆட்டம் நடைபெறும் அன்று பிட்சைப் பார்த்து அதில் நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதைத் தேர்வு செய்து விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
