‘ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இணையப் போகும் வீரர்..’ எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 21, 2019 06:49 PM
சவுத்தாம்டன் நகரில் சனிக்கிழமை நடைபெற இருக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள ஆப்கானிஸ்தான் அணி வலிமையான இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் எப்படி இந்திய அணியை எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி ஒருமுறை கூட விளையாடியதில்லை என்பது இதில் குறிப்பிடத்தக்கது. அவசரப்பட்டு விக்கெட்டுகளை இழக்காமல் வங்கதேசம் போல ஆப்கானிஸ்தான் அணி விளையாடினால் போட்டி சுவாரஸ்யமாக வாய்ப்புள்ளது.
இதுவரை இந்திய அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காயத்தால் ஷிகர் தவான் தொடரிலிருந்தே விலகியுள்ள நிலையில் புவனேஷ்வர் குமார் அடுத்த மூன்று போட்டிகளுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பயிற்சியின் போது விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை விஜய் சங்கர் விளையாடாவிட்டால் அவருக்குப் பதிலாக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் இந்திய ரசிகர்கள். புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக முகமது ஷமி விளையாடுவது உறுதியாகிவிட்ட நிலையில் விஜய் சங்கருக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் அல்லது இளம் வீரரான ரிஷப் பந்த் ஆகிய இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
