‘சச்சின், லாராவின் இமாலய சாதனை’... 'முறியடிக்க காத்திருக்கும் இந்திய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 21, 2019 06:25 PM
சௌதாம்டனில் நடைபெற உள்ள இந்திய - ஆஃப்கானிஸ்தான் போட்டியில், விராட் கோலி மற்றொரு உலக சாதனையை படைக்க காத்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது அசாத்திய பேட்டிங் திறனால் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த 16-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில், விராட் கோலி அதிவேகமாக ஒருநாள் போட்டியில் 11,000 ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை தகர்த்தார். இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா ஆகியோரின் சாதனையை விராட் கோலி முறியடிக்க அவருக்கு 104 ரன்களே தேவைப்படுகின்றன.
சர்வதேசப் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் (453 இன்னிங்ஸ்) எட்டிய சாதனையை சச்சின், மற்றும் லாரா ஆகியோர் கூட்டாக வைத்துள்ளனர். தற்போது வரை 131 டெஸ்ட், 222 ஒருநாள் போட்டிகள், 62 இருபது ஓவர் போட்டிகள் என 415 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி, மொத்தம் 19,896 ரன்களை குவித்துள்ளார்.
நாளைய ஆட்டத்தில் அவர் 104 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைப்பார். தற்போதைய உலகக் கோப்பை தொடரில், இன்னும் சதம் அடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதத்தை எட்டி, இந்த சாதனையை படைப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.