‘இந்தியா பற்றிப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்..’ கடும் எதிர்ப்புக்குப் பிறகு ட்வீட் நீக்கம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 21, 2019 03:31 PM
இந்தியா பற்றிப் பதிவிட்ட ட்வீட்டை ரசிகர்களின் கடும் கண்டனத்தால் நீக்கியுள்ளார் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் முடிவடைந்த பிறகு பல தரப்பிலிருந்தும் இந்திய அணி பாராட்டைப் பெற்று வருகிறது. அதே சமயம் பாகிஸ்தான் அணி அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி இந்தியா பற்றிப் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு பத்திரிக்கை நிருபர் ஒருவர் இந்தியாவைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஹசன் அலி, “உங்கள் எண்ணம் போல நடக்க நான் இந்திய அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என இந்தியில் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டால் கொதிப்படைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான் வீரர் எப்படி வாழ்த்துக் கூறலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ரசிகர்களின் கண்டனத்தைத் தொடர்ந்து ஹசன் அலி சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கியுள்ளார். இந்தியாவுடனான ஆட்டத்தில் 9 ஓவர்கள் பந்துவீசிய ஹசன் அலி 89 ரன்கள் கொடுத்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் வாஹா எல்லைக்குச் சென்ற போது பாகிஸ்தான் எல்லைக்குள் நின்று கொண்டு இந்திய ராணுவ வீரர்களைக் கிண்டல் செய்ததாகவும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார் ஹசன் அலி.
