‘தல’ தோனி ஸ்டைலில் ஃபினிஷிங்.. ‘அவர் சாதனையையும் முறியடித்து’.. ‘மாஸ்’ காட்டிய இந்திய வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 07, 2019 10:50 AM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன்மூலம் 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான தவான், கே.எல்.ராகுல் இருவரும் விரைவிலேயே வெளியேற, அடுத்து வந்த கோலியும், ரிஷப் பந்தும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கோலி 59 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் 42 பந்துகளில் 65 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ரிஷப் பந்த் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் இதுவே. இதற்கு முன்னதாக தோனி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி பானியில் சிக்ஸர் அடித்து ரிஷப் பந்த் ஆட்டத்தை முடித்து வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
