35 ரன்களுக்கு ஆல் ‘அவுட்’... ‘18 ஓவர்களுக்குள்’ முடிந்த ‘ஒரு நாள்’ போட்டி... ஒரே மேட்சுல ‘எத்தன’ மோசமான சாதனை!...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேபாளத்திற்கு எதிரான போட்டியில் யு.எஸ்.ஏ அணி 35 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை லீக் போட்டியில் நேபாளம் - யு.எஸ்.ஏ அணிகள் மோதியுள்ளன. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய யு.எஸ்.ஏ அணி 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்த அணி வீரர் சேவியர் மார்செல் 15 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்களாகும்.
இந்தப் போட்டியில் நேபாள அணியின் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து விளையாடிய நேபாளம் 32 பந்துகளில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. யு.எஸ்.ஏ அணி வெறும் 12 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் குறைந்த ஓவரில் எதிரணியினரை சுருட்டிய அணி என்ற சாதனையை நேபாளம் நிகழ்த்தியுள்ளது.
மேலும் ஒரு நாள் போட்டிகளில் யு.எஸ்.ஏ அடித்துள்ள 35 ரன்களே குறைந்தபட்ச ரன்களாகும். இதற்கு முன்னதாக கனடா (36), ஜிம்பாவே (38), இலங்கை (43) ஆகிய அணிகள் இதுபோல குறைந்த ரன்கள் அடித்துள்ளன. மொத்தமாக இந்தப் போட்டி 17.2 ஓவர்களில் முடிவுக்கு வந்த நிலையில், குறைந்த ஓவரில் முடிவுக்கு வந்த ஒரு நாள் போட்டி என்ற சாதனையையும் இது படைத்துள்ளது.
