'ஸ்டெம்பில் பட்டுத் தெறித்த பந்து'.. ஆனால் அடுத்த நொடியில் காத்திருந்த ஆச்சர்யம்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 09, 2019 01:32 PM

இங்கிலாந்து - வங்கதேசம் இடையே நிகழ்ந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நம்ப முடியாத அளவில், ஸ்டெம்பில் பட்ட பந்து சிக்ஸர் போயுள்ள சம்பவம் பெருமளவில் ட்ரெண்டாகியுள்ளது.

ball go for \'six\' after hitting the stumps Viral Video tweeted by ICC

டாஸ் வென்ற பிறகு இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில் ஜேசன் ராய் தனது அதிரடி சதத்தைக் கொடுத்தும், பட்லர் பேர்ஸ்டோ தனது அதிரடியான ஆட்டத்தைத் தந்தும் 386 ரன்களுக்குக் கொண்டு வந்து வெற்றி இலக்கை நிறுத்தினர்.  அதன் பிறகு இந்த இலக்கை எதிர்கொள்ளும் நோக்கில் களமிறங்கியது வங்கதேச அணி. ஓவருக்கு 8 ரன் என்கிற கணக்கு போட்டு விளையாண்ட வங்கதேச அணியை மிரட்டினார் ஆர்ச்சர்.

ஆர்ச்சர் வீசிய ஒவ்வொரு பந்தும் 150+ வேகத்தில் பாய்ந்தன. வங்கதேசத்தின் வீரர்களும் திக்குமுக்காடினர்.  4-வது ஓவரில் சௌம்யா சர்காருக்கு வீசிய பந்துதான் அந்த ஓவரின் இரண்டாவது டெலிவரி. அந்த பந்து 143 km/hr வேகத்தில் ஆஃப் ஸ்டம்புக்கும் பக்கமாக வந்து ஆனால், தள்ளி பிட்சானது. ஆனால் அது மீண்டும், ஸ்விங்காகி உள்ளே வந்ததை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், அப்போதுதான் அந்த பந்து ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது.

இதைவிடவும் ஹைலைட், ஸ்டம்பில் பட்ட பந்து, தடைகளைத் தகர்த்தெறிந்து தன் இலக்கை நோக்கி செல்வது போல்  நேரே சென்று சிக்ஸ் லைனை அடைந்ததுதான். அனைவரையும் உறைய வைத்த இந்த சம்பவத்தில் ஸ்டெம்பில் பட்ட பந்து 54 மீட்டர் பயணம் செய்து சிக்ஸரை அடைந்திருக்கிறது. வரலாற்றிலேயே இப்படியான சிக்ஸர் இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது. பின்னர் வங்கதேச அணி 280 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதாவது 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.